1. காதல் திருமணம் என்பது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவர்களாகவே ஒருவரை ஒருவர் மனமார விரும்பி அவர்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் இணைவு / பந்தம் ஆகும். இதனை ஜோதிடத்தில் காந்தர்வ திருமணம் என்று கூறுவர். அப்படிப்பட்ட ஜாதகங்களுக்கு திருமணப் பொருத்தம் பார்க்க அவசியம் இல்லை தான். காதலித்து திருமணம் செய்பவர்களுக்கு, திருமணப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை என மூல ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. காதலிக்கும் இருவரின் மனப் பொருத்தம் ஒன்றையே கவனிக்க வேண்டும்.
2. காதல் கொள்பவர்கள், அவர்களின் பெற்றோர்களை, அவர்தம் கருத்துக்களை, விருப்பங்களை கேளாமல் அவர்கள் பிறந்த சாதி, மதம், பழக்க வழக்கம் இவற்றினை புறந்தள்ளி அவர்களுக்குள்ளாகவே ஏற்படுத்திக்கொள்ளும் சொந்தம் / பந்தம் ஆகும்.
3. ஒரு ஆண் அல்லது ஒரு பெண் காதல் கொள்ள ஜாதகத்தில் குறிகாட்டுமா என்றால் நிச்சயம் குறி காட்டும் என்றே கூற முடியும். இதனை முன்கூட்டியே பெற்றோர்கள் அறிந்து வைத்துக் கொண்டால் தமது பெண், பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்வுக்குப் பெற்றோர் தடை இல்லாமல் இருந்து இவர்களின் ஆசியோடு திருமணத்தை நடத்தி வைத்து விட்டால் நாம் பெற்று வளர்த்த நமது அருமை குழந்தைகள் தனிமைப்படாமல் குடும்பத்தோடு இணைந்து மகிழ்வோடு வாழலாம். பெற்றோர்களின் இறுதிக்காலமும் ஒரு இன்பமயமான சூழலுக்குக் கொண்டு செல்லும். ஜாதகத்தில் 5-ஆம் வீடு என்பது ஒருவரின் சம்பிரதாயங்கள் மற்றும் அவர் தம் பழக்க வழக்கங்களைக் குறிக்கும். இங்கு மத சம்பிரதாயங்களை 9ஆம் வீடு குறிக்கும். 7 ஆம் வீடு வாழ்க்கை துணைவரைக் குறிக்கும்.
4. சம்பிரதாயங்களைப் புறக்கணித்து காதல் மணம் புரிவோர் ஜாதகத்தில் 5 ஆம் வீட்டில் வலிமையான கிரகங்களோ அவ்வீட்டின் ஆட்சி கிரகமோ இடம் பெறும். காதல் உணர்வுகளைத் தூண்டி மணம் செய்ய வைப்பதில் வலிய கிரகம் சனி ஆகும். அதற்கு அடுத்த வலிமையான கிரகம் ராகு.
5. ஆணின் ஜாதகத்தில் சனி அல்லது ராகு இவர்களின் பார்வை / சேர்க்கை மூலம் சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால் காதல் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகம். ஆகவே 5, 7 மற்றும் 9 ஆம் வீட்டின் அதிபதிகள் மற்றும் அவ்வீட்டுடன் தொடர்புடைய கிரகங்கள் காதல் திருமணத்தை நிர்ணயிக்கின்றன.
6. ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் செய்யும் பணியை பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் செய்கிறது. அதாவது சனி அல்லது ராகு செவ்வாயுடன் சேர்ந்தாலோ, செவ்வாயை பார்த்தாலோ காதல் தொடர்புகளை ஏற்படுத்தும். முடிவில் திருமணம் நடப்பது ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன், சனி, ராகு, சந்திரன் இவர்களின் அமைப்பைப் பொறுத்தது.
7. காதல் திருமணத்தை தவறாகப் பார்க்கும் மனப்பான்மையைப் பெற்றோர்கள் முதலில் கைவிட வேண்டும். காதல் திருமணம் மட்டுமே நிலைக்கும் அமைப்பு சில ஜாதகங்களுக்கு உண்டு. பழங்கால நூல்களில் 7-ல் சனி இருந்து, செவ்வாய் அதனைப் பார்த்தால், அந்த ஜாதகர் தன்னைவிடத் தகுதி, குணம், ஒழுக்கம், அந்தஸ்தில் குறைந்தவரை திருமணம் செய்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. (ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாயும், சனியும் பாபர்கள், எனவே இவர்களின் கூட்டு / தொடர்பு தாம் பிறந்த குடிக்கு / குலத்துக்கு கேடு செய்ய தூண்டும்.)
8. இங்கு, தகுதி குறைவானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டது , ஜாதியை வைத்து அல்ல. ஏனென்றால் உயர்ந்த ஜாதியிலும் (உயர்குடி பிறப்பிலும்) குணத்தில் தகுதி குறைவானவர்கள் உண்டு.
9. ஜோதிடத்தைப் பொறுத்தவரை செவ்வாய், சனி ஆகியவை ஒன்றுக்கொன்று பகை கிரகங்களாகும். செவ்வாய் நெருப்புக்கு உரியது. சனி நீருக்கு உரியது. எனவே, இந்த கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று பார்க்கும் அமைப்பு உள்ள ஜாதகர்களும், ஒரே வீட்டில் இருக்கப் பெற்ற ஜாதகர்களும், தங்கள் நிலை / தகுதிக்கு எதிரான முடிவுகளை எடுப்பர்.
10. ஒரு சிலருக்கு காதல் திருமணம் நடந்தாலும், அதில் மணமுறிவு ஏற்பட்டு, பின்னர் பெற்றோர் பார்த்த வரனைத் திருமணம் செய்து இறுதி வரை ஒன்றாக வாழ வேண்டிய நிலையும் ஜாதக ரீதியாக அமையும்.
11. இது ஒருபுறம் என்றால், பெற்றோர் நிச்சயித்த திருமணம் தோல்வியில் முடிந்ததால், தாமாகவே விரும்பிய வரனை 2வது திருமணம் செய்து சிறப்பாக வாழும் ஜாதக அமைப்பு உள்ளவர்களும் இருக்கின்றனர், என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
12. எனவே, எந்த மாதிரியான கிரக அமைப்பு உள்ளது என்பதை திருமண வயது நெருங்கும் துவக்கத்திலேயே ஆராய்ந்து, அதற்கு ஏற்றது போன்ற திருமணத்தை அமைத்து
தருவதே பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்.
13. தனது பிள்ளைக்கு (ஆண் / பெண் இருபாலருக்கும்) காதல் திருமணம்தான் நடக்கும் என்ற கிரக அமைப்பு காணப்பட்டால், அவர்களது காதலை பெற்றோர்கள் எதிர்க்காமல், அது நல்ல வரனாக இருப்பின் (எந்த கெட்ட பழக்க வழக்கமும் இல்லாத பட்சத்தில்) அதனையே தேர்வு செய்து திருமணம் நடத்தி வைப்பதே நல்ல பலனைத் தரும். அல்லது, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்ட உடல் சுகம் மட்டுமே கருதி பெற்றெடுத்தது போன்று பெற்றோர்களின் நிலை அமைந்து விடுமேயன்றி அன்புக்கும், பாசத்துக்குமான பிணைப்பு இல்லாமல் போய்விடலாம்.
14. காதல் செய்வதால் வரக்கூடிய சாதக பாதகங்களைப் பற்றி யோசிப்பதற்கு இன்றைய இளைஞர்களுக்கு நேரமில்லை. காதல் என்பது ஜாதி, மதம், இனம், மொழிகளைக் கடந்து, வரதட்சணை போன்ற பிரச்சனைகளுக்கும் ஓர் தீர்வு என்பதால் அது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், காதல் என்ற பெயரால் காம விளையாட்டுகளில் ஈடுபட்டு, பெற்றவர்களுக்கும் சுற்றத்தாருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் காதலர்களை ஏற்றுக் கொள்ள முடியாது தான்.
15. காதலுக்கு கண்ணில்லை என்பதால் காதலிக்கும் போது நிறை குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் திருமணத்திற்குப் பின் சின்ன சின்ன விஷயங்கள் கூட பூதாகரமாகிவிடும். காதலிப்பது மன ரீதியாக ஆரோக்கியமான விஷயம் என்பதால், காதலிப்பதில் தப்பில்லை.
16. திருமண வாழ்க்கையை அனுசரித்து வாழ முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே காதலிப்பது நல்லது.
17. ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, ஏமாறுவது போன்றவை நடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. காதலிக்கக்கூடிய வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. காதல் திருமணமும், கலப்புத் திருமணமும் அவரவரின் பிறந்த ஜாதகத்திலேயே கிரகங்களால் குறிப்பிடப்பட்டுஇருக்கும். காதல் என்பது காமம் அல்ல. அது ஒரு அன்பின் ஈர்ப்பு. இனக்கவர்ச்சியும், உடல் உணர்ச்சியையும் காதல் என்ற பெயரால் அசிங்கப்படுத்தாமல் இருப்பது நல்லது. முதலில் மனதைப் புரிந்து கொள்ளுங்கள்.
18. ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் ராகுபகவான் அமையப் பெற்று, 7ம் அதிபதியும் சுக்கிரனும் ராகு சாரம் பெற்றிருந்தால், சிறிதளவாவது வேறுபட்ட ஒருவரை கலப்புத் திருமணம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டை குறிப்பிடுவது போல சந்திரனுக்கு 7ம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்களில் ஏதாவது இருகிரகங்கள் அமையப் பெற்றாலும் பழக்கவழக்கத்தில் மாறுபட்ட இடத்தில் திருமணம் செய்ய நேரிடும்.
வெற்றிகரமான காதல் திருமணத்திற்கு சில கிரக இணைவுகள்
1. ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் 12ஆம் வீட்டிலும், பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் 12 ஆம் வீட்டிலும்.
2. 9-ஆம் வீட்டில் அசுப கிரகம்.
3. ஆண் மற்றும் பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் தங்கள் வீடுகளை பரிவர்த்தனை செய்திருந்தால் காதல் திருமணம் வெற்றிகரமாக இருக்கும். மேலே கூறப்பட்டவை வெகு சிலதே. இன்னும் பல விதிகளும், இணைவுகளும் உள்ளது.
அனுபவம் பெற்ற ஜோதிடரின் உதவியை நாடுதல் அவசியம். காதல் திருமணம் கைகூடாது என அறிந்த பின்னர் தாம் காதலிக்கும் பெண்ணை / ஆசைப்படும் பெண்ணை (ஒரு தலை காதல் ) நட்பு ரீதியாக அல்லது சகோதரி பாசத்தோடு விலகுவது ஒரு சிறந்த ஆணின் செயலாகும். வற்புறுத்தி தொல்லைகள் அளிக்காமல் இருப்பதே தாம் காதலித்த அந்த பெண்ணுக்கு அளிக்கும் ஒரு சிறந்த அன்பு பரிசாகும். இதனை, ஆண் பெண் இருபாலரும் ஜோதிட ரீதியாக அறிந்து செயல்படுவது மனித குலத்துக்கு நாம் செய்யும் ஒரு பெரிய மானுட செயல் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக