சனிப்பெயர்ச்சி பலன்கள்
2020-2023
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, மங்களகரமான விகாரி வருடம் தை மாதம் 10ஆம் (24.01.2020) தேதியன்று அமாவாசை திதியில், ஒளி நாயகனான சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனி தேவர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி மார்கழி மாதம் 11ஆம் தேதியின் பின்னிரவு அதாவது (27-12-2020) அதிகாலை 5.16-க்கு சனியானவர் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
மேன்மை பொருந்திய மேஷராசி அன்பர்களே...!!
சனியின் நாமம் : கர்ம சனி
உங்கள் ராசிக்கு 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் அங்கிருந்து பெயர்ச்சி அடைந்து 10ஆம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருக்கிறார்.
ஜீவன ஸ்தான அதிபதி ஜீவன ஸ்தானத்தில் பலம் பெறுவதால் தொழில் சார்ந்த முயற்சிகளில் சிறப்படையும். கமிஷன் தொடர்பான தொழில்களில் தனவரவு மேம்படும்.
சனிபகவான் தான் நின்ற ராசியில் இருந்து மூன்றாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார். சகோதர சகோதரிகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் மாறி புரிதல் ஏற்படும். திருமண ஏற்பாடுகளுக்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவதன் மூலம் சாதகமான முடிவுகள் உண்டாகும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பால் இழுபறியில் உள்ள காரியங்கள் வெற்றியை ஏற்படுத்தி தரும். இடம் சார்ந்த விஷயங்களை கவனமாக கையாளுவதன் மூலம் நற்பலன்களை அள்ளித்தரும்.
பொதுவாழ்வில் நற்பெயரும், புகழும் மேலோங்கும். செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். அலைச்சல்கள் அதிகரித்த போதிலும் ஆதாயம் இருக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஈடேறும். நண்பர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
தங்களது துறையில் பெரிய முன்னேற்றத்தை காண்பீர்கள். பயிற்சியின் பொருட்டு வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். தங்களின் மதி நுட்பத்தை வெளிப்படுத்த சரியான தருணங்கள் ஏற்படும். சக ஊழியர்களிடம் சற்றே ரகசியங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதால் நன்மையை அடைவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ப பணி வாய்ப்புகள் சாதகமாக அமையும். பொறுப்புகள் அதிகரிப்பதால் அவ்வப்போது உடல் அசதியும், சோர்வும் ஏற்படும்.
வியாபாரிகளுக்கு :
சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய காலம் இது. தங்களது தொழிலுக்காக அயல்நாட்டு பயணம் மேற்கொண்டு மேன்மை அடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பாக இருக்கும். எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு தங்களது தொழிலில் லாபம் பெருகும். இரும்பின் விலை அதிகரிக்கும் சூழல் இருப்பதால் அதை சார்ந்த வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபமும் பெருகி தொழிலில் நல்ல உயர்ந்த நிலைக்கு உயர்வீர்கள்.
மாணவர்களுக்கு :
அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்களது படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி மேற்கொள்ளும் மாணவர்கள் அவர்களது கல்வி கவனத்தை துரிதப்படுத்துவதன் மூலம் நல்ல மதிப்பெண்களை பெறலாம். ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக தேர்வு முடிவுகள் வந்துசேரும். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் சம்பந்தமான துறையில் உள்ளவர்கள் புதுவிதமான சாதனைகளைப் படைத்து அதற்காக பரிசுகள் மற்றும் பட்டங்களை பெறுவீர்கள்.
பெண்களுக்கு :
புத்திர பாக்கியம் விரைவில் கைகூடும். மற்றவர்களுக்கு உதவும்போது உதவி பெறுவோரின் தன்மைகள் அறிந்து செயல்படுவது நன்மையை அளிக்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தங்களது தொழில் கூட்டாளிகளிடம் சற்று கவனத்தை கடைபிடிப்பது அவசியமாகும். தாய்வழி உறவினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் அனுகூலமான சூழல் அமையும். சுப விரயங்களால் வாழ்க்கையில் புதுவிதமான பரிணாமத்தை அடைவீர்கள். தற்பெருமை பேசும் இடத்தில் அமைதி காப்பது உங்களின் மீதான கீர்த்தியை மேம்படுத்தும்.
விவசாயிகளுக்கு :
பூமியில் இருந்து கிடைக்கக்கூடிய தன, தானிய சம்பத்துக்கள் நல்ல லாபத்தை பெற்றுக்கொடுக்கும். கடுகு போன்றவற்றின் விலை அதிகரிக்கும். கருப்பு நிற தானியங்களின் விளைச்சல் சிறப்பாக இருக்கும். கால்நடைகளுக்கு தக்க பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் கால்நடைகளின் ஆரோக்கியம் சீரடையும். நீர்வளம் தேவைக்கேற்ப இருக்கும். அண்டை அயலாரிடம் நட்புறவு பாராட்டுவதால் நன்மைகள் பெறலாம். பழைய வரவேண்டிய பாக்கிகள் உரிய காலத்தில் வந்துசேரும். கடல் கடந்து வணிகம் செய்பவர்களுக்கு ஏற்றமான காலம் இது.
அரசியல்வாதிகளுக்கு :
கட்சி சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூக பணிகளில் இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்கி புதுவகை சாதனை படைப்பீர்கள். பிரச்சாரம் சார்ந்த பயணங்களில் உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்ற சொல்லுக்கு உதாரணமாக திகழ்வது அவசியம். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும்.
கலைஞர்களுக்கு :
தங்களது கலைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று வர நேரிடும். தங்களைவிட வயதில் மூத்த பெரியோர்கள் சபை சமூகத்தில் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தங்களுக்கு பொருள் சேர்ப்பதற்கு உண்டான கலையறிவு மேலோங்கி காணப்படும். தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதத்தை பொருட்டு லாபம் பெருகும். புதிய நபர்களின் தொடர்பால் புதிய வாய்ப்புகள் கைகூடும்.
வழிபாடு :
மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று அவரவர்களின் குலதெய்வத்தை வழிபாடு செய்வதன் மூலம் நன்மைகளை பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக