புதன், 16 செப்டம்பர், 2020

மகப்பேறு அருளும் மகத்தான தலம்! திருவாலங்காடு ஸ்ரீ புத்திரகாமேஸ்வரர் ஆலயம்...

திருவாலங்காடு ஸ்ரீ புத்திரகாமேஸ்வரர் ஆலயம்






மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்புடைய திருத்தலங்களில் திருவாலங்காடு ஸ்ரீவடாரண்யேசுவரர் கோயிலும் ஒன்று. இத்தலத்துப் பெருமான் வண்டார்குழலி சமேத வடாரண்யேசுவரர் என்றும் ஆலங்காட்டீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.   புத்திரப்பேறு அருளும் ஸ்ரீ புத்திரகாமேஸ்வரர் எழுந்தருளியுள்ள இக்கோயில் புராணச் சிறப்பும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையும் கொண்டது.  இக்கோயிலின் தலபுராணச் சிறப்பை திருவாவடுதுறை மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய திருத்துருத்திப் புராணத்தில் திருவாலங்காட்டுப் படலத்தில் காணலாம்.  

ஸ்ரீ புத்திரகாமேஸ்வரர்

பரதன் என்ற அந்தணரும், அவரது மனைவியும் புத்திரப்பேறு இல்லாமல் வருந்தி, சிவபெருமானை வேண்டி, கடும் தவம் புரிந்தனர். சிவபெருமான் அசரீரியாக, “நீங்கள் இருவரும் திருவாலங்காடு தலத்தை அடைந்து புத்திரகாமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, புத்திரகாமேஸ்வரரையும் ஆலங்காட்டீசரையும் வழிபட்டால் உங்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும்” என்று அருளினார். அதன்படி பரதனும் அவர் மனைவியும் திருவாலங்காடு வந்து வணங்கி, பெண் குழந்தையைப் பெற்று எண்ணிய செல்வமெல்லாம் அடைந்து இன்புற்று வாழ்ந்தனர்.  அதுபோல், இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவண்டார்குழலி அம்பிகையிடம், சிறகை இழந்த பருந்து ஒன்று அடைக்கலமானது.  அதன்மேல் கருணை கொண்ட அம்பிகை அந்தப் பருந்தின் உருவத்தை திருமகள் போல் எழில்மிகு பெண்ணாக மாற்றி அருளினார் என்கிறது தலபுராணம்.  

திருவாவடுதுறை ஆதீன கட்டுப்பாட்டிலுள்ள இந்தத் தலத்து இறைவன் மீது மிகுந்த பக்தி கொண்டவன் மூன்றாம் குலோத்துங்கச் சோழன்.  தனது தலையில் இந்தத் தலத்து இறைவனின் திருவடிகளைச் சூடிக்கொண்டதற்கு ஆதாரமாக இந்தக் கோயிலில் குலோத்துங்கச் சோழனின் உருவச்சிலை அமைந்திருக்கிறது.  

“குழந்தைப்பேறு வேண்டுகின்ற தம்பதியர் இந்தக் கோயிலுக்கு காலையில் வந்து புத்திரகாமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, மூலவர் ஆலங்காட்டீசரை வணங்க வேண்டும்.  பின்னர், மேற்கு திசை நோக்கி தனிச் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் புத்திரகாமேஸ்வரர் சந்நிதிக்கு வந்து தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி முதலியவற்றை சிவாசார்யாரிடம் சொல்லி சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.  அவர், இறைவனுக்கு அர்ச்சனை செய்து இரு மலர் மாலைகளைத் தருவார்.  அதனைத் தம்பதி அணிந்து கொண்டு, தொழுத கைகளுடன் புத்திரகாமேஸ்வரரை ஐந்து முறை வலம் வந்து, அம்மனை தரிசித்து, புத்திரகாமேஸ்வரரை மனதுக்குள் தியானம் செய்து அமைதியுடன் இல்லத்திற்குத் திரும்பினால் புத்திரப்பேறு உறுதி.  

அதுபோல் ஆண்டுதோறும் பங்குனி மாத அமாவாசை நாளில் புத்திரகாமேஸ்வரர் சந்நிதியில் சிறப்பு ஹோமம் நடைபெறும். இவ்வழிபாட்டில் புத்திர பாக்கியம் வேண்டுகின்ற தம்பதியர் வருகை தந்து வேண்டினால், வேண்டிய பலன் கிடைக்கும்.  

நீங்காத காய்ச்சல் உள்ளவர்களும், விட்டு விட்டு ஜுரம் வருபவர்களும் இந்தக் கோயிலின் தெற்கு பிராகாரத்தில் அருள்பாலிக்கும் ஜுரஹரேஸ்வரர் பெருமானிடம் தங்கள் பிரார்த்தனையை முறையிட்டு அர்ச்சனை செய்து வணங்கினால் காய்ச்சல் விலகி பூரண நலம்பெறுவர் என்பது ஐதீகம்.   நீண்ட ஆயுள் வேண்டுவோரும், ஜாதகத்தில் ஆயுள் கண்டம் உள்ளவர்களும் இந்தக் கோயிலுக்கு வந்து மூலவரைத் தொழுது, தெற்குப் பிராகாரத்தில் எழுந்தருளியிருக்கும் யமதர்ம ராஜனிடம் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.  கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடவும், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறவும் இந்தக் கோயிலின் ஆடிப்பூர வளையலணி திருவிழாவில் கலந்து கொண்டு வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று மங்கள வாழ்வு பெறுவர்.  

சனி பகவானின் மகன் மாந்தி தனிச் சந்நிதி கொண்டு சுபகிரகமாக அருள்புரிவது இந்தத் தலத்தின் சிறப்பம்சமாகும்.  மாந்திக்கு தோஷப் பரிகாரம் செய்ய விரும்புவோர், பருத்திக் கொட்டையை தரையில் பரப்பி, அதன்மேல் நல்லெண்ணெய் இட்டு பஞ்ச தீபம் ஏற்றி, மனமுருக பிரார்த்தனை செய்ய வேண்டும்.  இந்தப் பரிகாரம் ஒவ்வொரு சனிக்கிழமையும் ராகுகாலத்தில் (காலை 9.00-10.30) அபிஷேக ஆராதனையுடன் நடைபெறுகிறது.  இந்த மங்கள மாந்தியை வழிபடுவோர் திருமணத் தடை, வியாபாரத் தடை, உத்தியோகத் தடை, குடும்பச் சண்டை சச்சரவுகள் யாவும் நீங்கி வளம்பெறுவர்.  

இந்தத் தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நடராஜ பெருமான் திருவுருவம் சிறப்புடையது.  இம்மூர்த்தியின் பீடத்தில் திருமால் பஞ்சமுக வாத்தியம் வாசிப்பதாக அமைந்துள்ளது.  இரட்டை விநாயகர், பாதாள நந்தி இந்தத் தலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனிப் பெருவிழா, பங்குனி அமாவாசை, ஆடிப்பூர சிறப்பு வழிபாடு ஆகியன திருவிழாக்களாக நடைபெற்று வருகின்றன” என்று இந்தக் கோயிலின் சிறப்புப் பற்றி 90 வயது பெரியவர் சாமிநாத குருக்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் 17 கி.மீ. தொலைவிலும், ரயில் மார்க்கமாக குத்தாலம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 5 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...